இன்று புத்தக தினம்

இன்று புத்தக தினம்

எல்லாரும் புத்தக தினத்தை பற்றி எழுதும் பொழுது நாமும் ஏதேனும் இந்த தினத்திற்கு செய்தே ஆகவேண்டும் என்பதால் இந்த பதிவு

சிறு வயதில் புத்தகம் படிக்க கிடைத்தல் எனபது ஒரு வரம் .அதோடு அந்த காலங்களில் வேறு பொழுதுபோக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாகவும் இருக்கலாம் .

அம்புலி மாமா கதைகள் ,தெனாலிராமன் கதைகள் ,விக்ரமாதித்யன் கதைகள் இவையெல்லாம் சிரிக்கவும் ஓரளவுக்கு சிந்திக்கவும் வைத்தவை .

பின்பு பரிணாம வளர்சியின் காரணமாக சற்றே வேறுபட்ட கதைகளும் படிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது .இந்த தருணத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி ","நொண்டி பிள்ளையார் "போன்ற சிறுகதைகள் சற்றே ஒரு மாற்று சிந்தனையையும் புதிய பார்வையும் கொண்டு வந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை .

பின்பு அகிலனின் நாவல்கள் ,நினைவுகள் அழிவதில்லை என்ற தெலுங்கு மொழியாக்க நாவலும் மார்க்சிய சிந்தனைகளையும் ,தொழிலாள முதலாளி தத்துவத்தை உணர செய்தவை .

இவை அனைத்தும் ஒரு கதை கவிதை படிக்கும் ஒரு இன்பத்தை கொடுத்தவை என்று சொல்வதற்கில்லை .

இலக்கிய சுவை முற்றாக ஊட்டியவை என்றால் அது கல்கியின் பொன்னியின் செல்வன் மட்டும் தான் .ஒரு வேளை நான் சோழ மண்டலத்தை சேர்த்தவன் என்பதாலும் இருக்கலாம் .அந்த நாவலில் வரும் அத்துணை ஊர்களும் நான் பிறந்து வளர்ந்த திருச்சிக்கு மிக அருகில் இருந்ததால் என்னுடைய கற்பனையில் இந்த இந்த ஊர்களில் ,இந்த நிகழ்வுகள் நடந்ததா என்னும் ஆச்சர்யத்தையும் ,அந்த செழுமை வாய்ந்த ஊர்கள் இன்று சிறு தெருக்களாக உள்ளனவே என்ற வருத்தத்தையும் அளித்தவை .உதாரணம் உறையூர் .சோழ வரலாற்றில் உறையூருக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு .ஆனால் இன்று உறையூர் எனபது திருச்சியில் ஒரு சின்ன ஊர் மட்டுமே .

பின்பு வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே " என்ற நாவல் ,கவிதை நடையிலும் கதை சொல்லலாம் என்னும் ஒரு எண்ணத்தை எனக்கு உணர்த்தியவை .

பின்பு பகுத்தறிவு நூல்கள் ,வெற்று வனாந்திரத்தை எனக்குள் உருவாக்கியவை .இவையாவும் மனிதனின் மேல் உள்ள மதிப்பை கெடுக்கத்தான் உதவியதேயன்றி ,மனம் , மனிதம் போன்ற எந்த சித்தாந்தகளையும்
எனக்குள் ஏற்படுத்த வில்லை .

அதற்கு வடிகாலாக அமைந்தவை "எழுத்து ஆசான் " பாலகுமாரனின் சிறு சிறு கதைகள் .இவரை படிப்பவர்கள் எவர் மீதும் கோவம் கொள்ள மாட்டார்கள் .ஏனெனில் பொதுவான ஒரு நியாயம் ஒன்று இருந்தாலும் ,அவரவர்க்கு உள்ள நியாங்களையும் உணர செய்பவர் இவர் .

இவர்கள் தவிர்த்து துள்ளு நடைக்கு சொந்தக்காரர் எங்கள் ஊர் சுஜாதா ,விஞ்யானத்தை சாமான்ய மனிதனுக்கும் புரிய வைக்கும் ஒரு மிக சிறந்த ஆசிரியர் .இவருடைய நடையில் மட்டுமே ஒரு நக்கல் நய்யாண்டி இருக்கும் .

இவர்களைப்போன்று எண்ணற்ற ஆசிரியர்களின் புத்தகங்களை படித்து இருந்தாலும் மனதில் நின்றவர்கள் இவர்கள் தான் .

ஆனால் புத்தகம் வாசித்தல் எனபது இன்பம் தான் என்றாலும் ,அவற்றுக்கு செலவு செய்வது என்பது சற்றே சிரமமான காரியம் தான் .

அதனாலாயே இரவல் கொடுப்பது என்பது என்னளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியம் .ஏனெனில்
சிறுவயதில் படித்த ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது  .அந்த பொன்மொழி "நான் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை ஏனெனில் என் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் இரவல் பெறப்பட்டவையே ".
இந்த பொன்மொழி யார் சொன்னார் என்று நினைவில் இல்லை .அதனால் நாமும் யாரோ என்று சொல்லிக்கொள்வோம் .

இப்பொழுதும் புத்தகங்கள் வாங்கி படிக்கலாம் என்று நினைத்தாலும் மிகப்பெரிய எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களின், புத்தங்களின் விலை ,சற்றே மயக்கம் கொள்ள செய்பவையாக இருக்கிறது .

அதோடு வாசித்தல் என்பது இன்பம் தான் என்றாலும் நினைவில் அடிக்கடி நிழலாடும் ஒரு பழமொழி
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" எனபது தான் .

மனிதர்களிடம் தெரிந்த கொள்ள முடியாத விசயத்தையா புத்தகம் தந்து விடப்போகிறது





Comments

Popular Posts